நெஞ்சோடு கலந்திடு – 27

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

“இங்க பாரு.. இது பொண்ணுக பசங்ககிட்ட சொல்லுற டயலாக்.. ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணுகிட்ட சொல்லக் கூடாது.. நம்பர் சொல்லு.. எனக்கு அவர்கிட்ட பேசணும்..”

“எதுக்குன்னு சொல்லு.. தர்றேன்..”

“ம்ம்.. நீதான் லவ் பண்ணலைன்னு சொல்றியே.. அவர் வேற கொஞ்சம் ஸ்மார்ட்டா இருக்குறாரு.. நான் அவருக்கு ரூட்டு போடலாம்னுதான்..!!”

“ஓஹோ..?? ஏன்.. ஒருநாள் பேசுனதுலையே உன்னை மயக்கிட்டானா..?” இப்போது திவ்யாவின் குரலில் ஒருவித ஏரிச்சல் ஏறியிருந்தது.

“அப்படியே வச்சுக்கோ.. நீ நம்பர் குடு..!!”

“குடுக்க முடியாது.. போடீ..!!” திவ்யா கத்தினாள்.

“ஹாஹா.. இதுக்காகத்தான் நம்பர் கேட்டேன்..”

“எதுக்காக..?”

“நீ டென்ஷன் ஆகுறியான்னு பாக்குறதுக்காக..!! அப்பா.. அவரை லவ் பண்ணப் போறேன்னு சொன்னதும் எப்படி உனக்கு கோவம் வருது..!! சரி சரி.. கோச்சுக்காத கண்ணு.. எனக்கு அவரை லவ் பண்ற மாதிரிலாம் ஒன்னும் ஐடியா இல்ல..!! நீயே வச்சுக்கோ உன் ஆளை..!! நான்லாம் போட்டிக்கு வர மாட்டேன்..!!” அஞ்சு கிண்டலாக சொல்ல, திவ்யா டென்ஷனானாள்.

“இப்போ நீ என்கிட்டே செருப்படி வாங்காம போக மாட்டேன்னு நெனைக்கிறேன்..!!”

“ஏண்டி..??”

“பின்ன.. லூசு மாதிரி உளறிட்டு இருந்தா..?? உனக்கு அவன் நம்பர்தான வேணும்..? சொல்றேன் நோட் பண்ணிக்கோ.. அவனை லவ் பண்ணிக்கோ.. மேரேஜ் பண்ணிக்கோ.. என்ன எழவை வேணா பண்ணிக்கோ.. எனக்கு ஒரு கவலையும் இல்ல..!!”

“ஏய்.. சீரியஸா சொல்றியா..?”

“பார்த்தா எப்படி தெரியுது உனக்கு..?”

“அப்போ நெஜமாவே நீ அவரை லவ் பண்ணலையா..?”

“பண்ணலை பண்ணலை..!! அவன்தான் என்னை லவ் பண்றான்.. அதுகூட எனக்கு போன வாரந்தான் தெரியும்..!! அவனால நானே செம கடுப்புல இருக்கேன்.. போயிடு..!!”

“அப்புறம் யாருக்காக இங்க வெயிட் பண்ணிட்டு இருக்குற..?”

“நான் வேற ஒருத்தரை லவ் பண்றேன்.. அவருக்காகத்தான் இப்போ வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. போதுமா..?”

“வேற ஒருத்தரா..? அது யாரு..?”

“அவர் பேர் திவாகர்..!!”

“அவர் எப்படி பழக்கம்..?”

“ஏன்..? ஆன்லைன் மூலமா..!!”

“எத்தனை நாளா அவரை உனக்கு தெரியும்..?”

“ம்ம்ம்.. ஒரு ரெண்டு மூணு மாசமா..?”

“அசோக்கோட லவ்வை உதறி எறிஞ்சுட்டு.. அந்த திவாகரைத்தான் நீ கல்யாணம் செய்துக்க போறியா..?”

“ஆ..ஆமாம்..” திவ்யா சொல்லி முடிக்கும் முன்பே,

“போடீ லூசு..!!” அஞ்சு ஆத்திரமாக கத்தினாள்.

“ஏண்டி கத்துற..?”

“அப்புறம் என்ன..? அசோக் பத்தி நீயே எங்கிட்ட எவ்வளவு சொல்லிருக்குற.. சின்ன வயசுல இருந்து உன் மேல எவ்வளவு பிரியம் வச்சிருக்கார்னு..!! அவரை விட.. நேத்து வந்த அந்த திவாகர்தான் உனக்கு பெருசா போயிட்டானா..? உன்னை மாதிரி தப்பா முடிவெடுக்குற ஒருசில பொண்ணுகளாதான் எல்லா பொண்ணுகளுக்குமே கெட்ட பேர்டி.. பொண்ணுகன்னாலே நல்லவனை நம்ப மாட்டாளுகன்னு..!!”

“இங்க பாரு அஞ்சு.. நீ விஷயம் தெரியாம பேசுற.. அசோக் பத்தி உனக்கு முழுசா தெரியாது..!!”

“ஆமாம்.. அவரைப் பத்தி எனக்கு முழுசா தெரியாதுதான்.. அவர்கூட ஒரே ஒருநாள்தான் பேசிருக்கேன்.. கொஞ்ச நேரந்தான் ஸ்பென்ட் பண்ணிருக்கேன்..!! ஆனா அந்த கொஞ்ச நேரத்துலையே.. அவர் உன் மேல எவ்வளவு லவ் வச்சிருக்கார்னு என்னால முழுசா புரிஞ்சுக்க முடிஞ்சது..!!”

“அ..அப்படி என்ன பண்ணிட்டான்..?” இப்போது திவ்யாவின் குரலில் ஒருவித கலக்கமும், ஆர்வமும் பிறந்திருந்தது.

“ஹாஹா.. உனக்கு எப்படி தெரியும்..? நீதான் மயக்கம் போட்டு மட்டையாயிட்டியே..? நாங்க ரெண்டு பேருந்தான உன்னை அள்ளிக் கொண்டு போயி வீட்ல போட்டோம்..!!”

“எ..என்ன பண்ணான்னு சொல்லு..”

“எதுக்கு..?? இப்போ தெரிஞ்சு என்ன பண்ணப் போற..?? நான் சொல்லிட்டா மட்டும் உனக்கு புரியப் போகுதா..?? அதான்.. எனக்கு ஒரு இருபது நிமிஷத்துல புரிஞ்ச விஷயம்.. உனக்கு இருபது வருஷமா புரியலைன்னு சொல்றியே..?? இப்போ மட்டும் புரிஞ்சுக்கவா போற..??”

“ப்ளீஸ்டி..” திவ்யா கெஞ்சலாக கேட்க,

“ம்ம்ம்.. அழுதாரு.. துடிச்சாரு.. கண்ணீர் விட்டாரு..!! போதுமா..??” அஞ்சு அலறினாள்.

“………………..”

“அன்னைக்கு அந்த மனுஷன் துடிச்ச துடிப்பு.. உனக்கு என்னாச்சோன்ற அந்த பயம்.. அழுகையை அடக்க முடியாம அவர் பட்ட வேதனை..!! சத்தியமா அதெல்லாம் நான் சினிமாலயும், கதைலயும்தாண்டி பாத்திருக்கேன்..!! ஒரு பொண்ணுக்காக இப்படி துடிக்கிற ஆம்பளை கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் திவ்யா..!! எனக்குலாம் இப்படி ஒருத்தன் கெடைச்சா.. காலம் பூரா அவன் காலடில விழுந்து கெடப்பேன்..!!”

“………………..” அஞ்சு பேச பேச திவ்யா அமைதியாகவே இருந்தாள்.

“சரி விடு.. எனக்கெதுக்கு அதெல்லாம்..? உன் மேல அவ்ளோ பிரியமா இருந்த அவரையே நீ தூக்கி எறிஞ்சுட்ட.. நான் சொல்றதையா கேட்கப் போற..? இது உன் வாழ்க்கை.. உன் இஷ்டம்..!! நான் கெளம்புறேன்..!!”

சொன்ன அஞ்சு விடுவிடுவென சென்று கார்க்கதவை திறந்து உள்ளே புகுந்து கொண்டாள். காரை ஸ்டார்ட் செய்தாள். கியர் மாற்றி கிளம்பும் முன், திவ்யாவை ஒருமுறை ஏறிட்டு மெல்லிய குரலில் சொன்னாள்.

“நீ ஏதோ பெரிய தப்பு பண்றேன்னு எனக்கு தோணுது திவ்யா.. பாத்துக்கோ.. டேக் கேர்..!!”

கார் சீறிக்கொண்டு கிளம்பியது. திவ்யாவுக்கோ அசோக்கின் நினைவுகள் மனதுக்குள் பீறிக்கொண்டு கிளம்பியது. சிறுவயதில் இருந்து அசோக்குடனான நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாய் அவளுடைய மனதில் வந்து மோத, அவளையும் அறியாமல் கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது. பிரம்மை பிடித்தவள் போல நின்று கொண்டிருந்தவள், ஒரு சில வினாடிகள் கழித்துதான் தன் எதிரே வந்து நின்ற திவாகரின் காரை கவனித்தாள். உடனே கண்களில் வழிந்த நீரை அவசரமாய் துடைத்துக் கொண்டாள். உதடுகளில் ஒரு செயற்கை புன்னகையை வரவழைத்துக் கொண்டாள்.

அத்தியாயம் 28

அசோக் அந்த ஷாப்பிங் மால் முன்பாக பைக்கை நிறுத்தி பார்க் செய்தான். கண்ணுக்கு கொடுத்திருந்த குளிர் கண்ணாடியை எடுத்து ஷர்ட் பாக்கெட்டில் செருகிக் கொண்டான். ஹெல்மட் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு கலைந்திருந்த தலையை, பைக்கின் மிரர் பார்த்து சரி செய்துகொண்டான். நடந்து அந்த ஷாப்பின் மாலுக்குள் நுழைந்தான்.

ஐந்தடுக்குகள் கொண்ட அந்த ஷாப்பிங் மாலின் முதல் தளத்தில்தான் அவன் செல்ல வேண்டிய ஷாப் இருந்தது. வாட்ச் சேல்ஸ் அண்ட் ரிப்பேர் ஷாப்..!! அலுத்துப்போயோ, ஆற்றல் தீர்ந்து போயோ ஓடாமல் சுணங்கும் கடிகார முட்களை மீண்டும் ஓட வைக்கும் இடம்..!!

போன வருடம் அசோக்கின் பிறந்த நாளுக்கு திவ்யா ஒரு வாட்ச் பரிசளித்திருந்தாள். அவளுடைய பாக்கெட் மணி எல்லாம் சேகரித்து வைத்து, ஐந்தாயிரம் ரூபாய்க்கு அந்த வாட்சை வாங்கி அசோக்கிற்கு பரிசளித்திருந்தாள். அசோக்கிற்கு அந்த வாட்ச் என்றால் உயிர்..!! என்னதான் இருந்தாலும் அவனுடைய உயிர்க்காதலி அவனுக்கு அளித்த அன்பு பரிசல்லவா..?

திவ்யா அசோக்கை விட்டு பிரிந்துவிட்டது அந்த வாட்சுக்கும் தெரிந்து விட்டதோ என்னவோ..? இரண்டு நாட்களுக்கு முன்பாக.. ஓடமாட்டேன் என்று அடம் பிடித்து, இரண்டு முட்களும் அசையாமல் ஓரிடத்தில் நின்றுகொண்டன. பேட்டரி மாற்றிப் பார்த்தும் புண்ணியம் இல்லை..!! நேற்றுதான் அந்த கடையில் வந்து சரி செய்வதற்காக கொடுத்திருந்தான். இன்று மாலை வந்து திரும்ப வாங்கிக்க சொல்லியிருந்தான் அந்த கடையின் முதலாளி..!!

முதல் தளத்தை அடைந்து அந்தக் கடையை நெருங்கிய அசோக், கடும் எரிச்சலுக்கு உள்ளானான். காரணம்.. கடை பூட்டப்பட்டு கிடந்ததுதான்..!! ‘ப்ச்.. இதுக்காகத்தான் ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் கிளம்பி வந்தனா.. ? முடியாட்டா ஏன் கமிட் பண்ணிக்கிறானுக..? நாட்டுல ஏன் எவனுக்குமே பொறுப்புன்றதே இருக்க மாட்டேன்னுது..?’ சலிப்படைந்தவனின் கண்களில் கடைக்கு வெளியே, சிவப்பு பெயிண்டில் எழுதப்பட்டிருந்த அந்த வாசகம் தென்பட்டது.

“கடை உரிமையாளர் சி.சிட்டி பாபு. தொடர்பு கொள்ள – XXXXXXXXXX”

‘சிட்டி பாபுவாம் சிட்டி பாபு.. சரியான சீட்டிங் பாபு..’ மனதுக்குள் அந்த கடை உரிமையாளரை திட்டிய அசோக், செல்போன் எடுத்து கதவில் எழுதியிருந்த அந்த நம்பருக்கு கால் செய்தான். நான்கைந்து ரிங் சென்றதும் கால் பிக்கப் செய்யப்பட்டது. அடுத்த முனையில் கசகசாவென்று ஒரே இரைச்சல்.

“ஹலோ..”

“ஹலோ..”

“நான் பேசுறது கேக்குதா ஸார்..?”

“கேக்குதுப்பா.. சொல்லு..”

“என் பேர் அசோக்.. ஒரு வாட்ச் ஒன்னு.. ரிப்பேர் பண்ண கொடுத்திருந்தேன்.. நேத்து..”

“சரி.. அதுக்கு என்ன இப்போ..?”

“என்ன இப்போவா..? இன்னைக்கு ஈவினிங் வந்து வாங்கிக்க சொல்லிருந்தீங்க ஸார்.. வந்து பாத்தா கடை அடைச்சு கெடக்கு..”

“ஏன் தம்பி.. இன்னைக்குனா இன்னைக்கேவா வந்து நிப்ப..? போயிட்டு நாளைக்கு வா.. கடை இன்னைக்கு லீவு..!!”

“லீவா..?? வெளையாடாதீங்க ஸார்.. வாங்க.. வந்து எடுத்துக் குடுங்க..!!”

“வரவா..? நான் இப்போ ஆதம்பாக்கத்துல இருக்கேன் தம்பி.. உடனே அங்க வர முடியாது..!!”

“என்ன ஸார் இப்படி சொல்றீங்க..? அது எனக்கு ரொம்ப முக்கியமான வாட்ச் ஸார்.. நீங்க சரி பண்ணாட்டா கூட பரவால.. உடனே வந்து எனக்கு எடுத்து குடுங்க..!!”

“ஏன் தம்பி.. வாட்ச்சதான ஒப்படைச்சுட்டு போன..? என்னமோ உன் வாழ்க்கையையே ஒப்படைச்சுட்டு போன மாதிரி இப்படி பதர்ற..? நாளைக்கு வந்து வாங்கிக்கப்பா..!!”

“இல்லை ஸார்.. உங்களுக்கு புரியலை.. எனக்கு அந்த வாட்ச் ரொம்ப முக்கியம்.. அதை பிரிஞ்சு நான் ஒருநாள் கூட இருந்தது இல்ல..!! ப்ளீஸ் ஸார்..!!”

“என்னப்பா நீ..? அவன் அவன் இங்க வாக்கப்பட்டு வந்தவளையே பிரிஞ்சு போய் உக்காந்திருக்கான்.. நீ வாட்சை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு சொல்ற..?”

“என்ன ஸார் சொல்றீங்க..?”

“பொண்ணு மேட்டரா..? உன் ஆளு உனக்கு வாங்கி கொடுத்ததா..?”

“ஆமாம்.. ஏன் கேக்குறீங்க..?”

“நெனச்சேன்.. நான் அப்போவே நெனச்சேன்..!!” அந்த ஆள் இப்போது பெரிதாக கத்தினான்.

“என்னாச்சு ஸார்.. ஏன் இப்போ டென்ஷனாகுறீங்க..?”

“நம்பாத தம்பி.. இந்த பொண்ணுகளை மட்டும் நம்பவே நம்பாத..!! நம்பினேன்னு வச்சுக்கோ.. என்னை மாதிரி இப்படி பார்ல உக்காந்து ஒண்டியா பாட்டில் போட உட்ருவாளுக..!!”

“கடையை அடைச்சுப்போட்டு.. பாருக்கு போயிருக்கீங்களா..?”

“பின்ன என்ன போருக்கா போயிருக்கேன்..? பாருக்குதான் தம்பி..!! ஹ ஹ ஹ ஹ..” அந்த ஆள் இப்போது அழ ஆரம்பித்தான்.

“ஸார்.. ஏன் ஸார் அழறீங்க..?”

“எ..என் பொண்டாட்டி.. என் பொண்டாட்டி.. என்னை விட்டு ஓடிப்போயிட்டா தம்பி..!!”

“ஐயையே.. என்ன ஸார்.. இதுலாம் எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கீங்க..?”

“ஏன்.. சொன்னா என்ன..? ஊருக்கே தெரிஞ்சு போச்சு.. உனக்கு தெரிஞ்சா என்ன..? அவளுக்காக நான் காலநேரம் பாக்காம வாட்ச் கடைல கெடந்து ஒழைச்சேன்.. அவ என்னடான்னா எங்க காலனி வாட்ச்மேனை கரெக்ட் பண்ணிட்டு.. ஓடிப்போயிட்டா தம்பி..!!”

“ஸார்.. அழாதீங்க ஸார்..”

“அதான் சொல்றேன்.. இந்த பொண்ணுகளை நம்பாதீங்க.. நட்டாத்துல விட்டுட்டு போயிடுவாளுக..!! அவளுகளுக்கு செலவு பண்ற காசலாம் ஏதாவது அநாதை விடுதிக்கு டொனேஷனா குடுங்க.. கொஞ்சம் புண்ணியமாவது கெடைக்கும்..!!”

“ஐயையே.. என்ன ஸார் நீங்க.. முன்னப்பின்ன தெரியாத எங்கிட்ட வந்து.. அழுது பொலம்பிக்கிட்டு..? அழாதீங்க ஸார்..”

அசோக் அந்த சிட்டிபாபுவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவனுடைய நம்பருக்கு இன்னொரு கால் வந்தது. புது நம்பராக இருந்தது. ‘யார் இது..?’ என்று ஓரிரு வினாடிகள் குழம்பினான். அப்புறம் சிட்டி பாபுவிடம்,

“ஸார்.. எனக்கு இன்னொரு கால் வருது.. நான் அப்புறமா உங்களை கூப்பிடுறேன்..”

“சரி தம்பி.. நான் சொன்னதை மட்டும் மறந்துடாதீங்க..!! பொண்ணுகளை நம்பாதீங்க.. பொண்ணுகளை மட்டும் நம்பவே நம்பாதீங்க..!!”

“சரி ஸார்.. நம்பலை..நம்பலை..”

அசோக் சிட்டிபாபுவின் காலை கட் செய்துவிட்டு, அடுத்த காலை அட்டன்ட் செய்தான்.

“ஹலோ..” என்றான்.

“அசோக் செல்லம்..” அடுத்த முனையில் குழைவாக ஒரு ஆண் குரல்.

“ஹலோ.. யாரு..?”

“யாருன்னு தெரியலையா செல்லம்.. ஹாஹா.. ஹாஹா..”

அடுத்த முனை சிரிக்க ஆரம்பித்ததும், இப்போது அசோக்கிற்கு தெளிவாக தெரிந்து போனது.. அது யாரென்று..!! திவாகர்..!!

“திவாகர்..!!”

“பரவாலையே.. கரெக்டா கண்டு பிடிச்சுட்ட..??”

“என் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்..?”

“ஜஸ்ட் இப்போத்தான்.. திவ்யாவோட ஹேன்ட் பேக் திறந்து. அவ செல்போனை நோண்டி கண்டு பிடிச்சேன்..!!”

“ஓ.. சரி என்ன விஷயம்.. சொல்லுங்க..!!!”

“எனக்கு உன்கிட்ட சொல்றதுக்கு என்னப்பா இருக்குது..?? லாட்ஸ் அண்ட் லாட்ஸ் ஆஃப் தேங்க்ஸ்..!!”

“என்ன.. நக்கலா..??”

“நோ.. சீரியஸ்..!! திவ்யா எனக்கு கெடைப்பாளோ மாட்டாளோன்னு ரொம்ப கவலைல இருந்தேன் ராஜா.. நீ அடிச்ச கூத்துல.. நான்தான் கதின்னு என் காலுல விழாத குறையா எங்கிட்ட வந்து செட்டில் ஆகிட்டா..!! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அசோக்.. என் மனசார சொல்றேன்.. ஃப்ரம் மை ஹார்ட்..!! ஹஹாஹஹாஹஹா…!!”

“ரொம்ப சிரிக்காதீங்க திவாகர்.. திவ்யாவுக்கு கூடிய சீக்கிரமே உங்களை பத்தி தெரிய வரும்..!!”

“ஹாஹா.. அது தெரியிறப்போ பாத்துக்கலாம் செல்லம்.. இப்போ என்ன அவசரம்..?? ம்ம்ம்ம்.. அப்புறம்..?? திவ்யாவை நீயும் லவ் பண்ணுனியா கண்ணா.. ம்ம்.? ம்ம்..? ஹஹாஹஹா..!! எவ்வளவு பழகிருக்கோம்.. எங்கிட்ட கூட நீ சொல்லலை பாத்தியா..? ஹஹாஹஹா..!!” திவாகரின் கிண்டல் அசோக்கிற்கு எரிச்சலை கிளப்பியது, “திவாகர்.. உங்க நக்கலுக்குலாம் நான் ஆளு இல்ல.. எனக்கு வேற வேலை இருக்கு..!!”

“இருப்பா இருப்பா.. உன்கிட்ட இன்னொன்னு சொல்லணும்..!!”

“என்ன..??”

“முன்னாடிலாம் நான்தான் திவ்யாகிட்ட கெஞ்சிட்டு இருப்பேன் அசோக்.. இப்போ என்னடான்னா.. அவ கெஞ்சுறாப்பா..!! நான் ஒன்னு சொன்னா.. அதை எப்படி விழுந்து விழுந்து பண்ணுறா தெரியுமா..?? எல்லாம் உன்னாலதான்..!! ம்ம்ம்ம்.. போற போக்கை பாத்தா.. எனக்காக என்ன வேணா செய்வா போல இருக்கு..!! என்ன வேணா..!!!” இரண்டாவதாக சொன்ன ‘என்ன வேணா’விற்கு திவாகர் எக்ஸ்ட்ரா அழுத்தம் கொடுக்க, அசோக் இப்போது டென்ஷன் ஆனான்.

– தொடரும்

நெஞ்சோடு கலந்திடு – 27

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000